நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் – டி’ ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. இதில் டேவிட் மில்லரின் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
நியூயார்க் நகரின் நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.
அந்த அணி பேட்ஸ்மேன்களில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 40 ரன்கள் எடுத்தார். வான் பீக், 23 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ஒட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. டிகாக், ரீசா ஹென்ரிக்ஸ், மார்க்ரம், கிளாசன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 12 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென் ஆப்பிரிக்கா.
இக்கட்டான அந்த தருணத்தில் ஸ்டெப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் இணைந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்டப்ஸ் 33 ரன்களில் வெளியேறினார். மார்கோ யான்சன் 3 ரன்களில் வெளியேறினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் மில்லர். அவர் 51 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தார்.
18.5 ஓவர்களில் 106 ரன்களை எட்டியது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் குரூப் – டி பிரிவில் புள்ளி பட்டியலில் இரண்டு வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராகவும் விக்கெட்டுகளை விரைந்து இழந்தது தென் ஆப்பிரிக்கா. இருந்தும் அந்த அணி அதில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours