சென்னை: பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன் என நம்புவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகளை சந்தித்து பேசி இருந்தார். அப்போது காணொளி அழைப்பு மூலம் பிரதமருடன் சிந்து பேசி இருந்தார்.
“ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக இந்த சார்பில் நான் பங்கேற்கிறேன். 2016 ஒலிம்பிக்கில் நான் வெள்ளி வென்று இருந்தேன். 2020 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருந்தேன். இந்த முறை பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன் என நம்புகிறேன். மீண்டும் ஒரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.
இந்த முறை ஒலிம்பிக்கில் நிறைய அனுபவத்துடன் கலந்து கொள்கிறேன். ஆனால், இந்த பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்காது. இருந்தாலும் எனது சிறந்த முயற்சியை நான் வெளிப்படுத்துவேன். இந்தியா சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைவருக்கும் என வாழ்த்துகள். இதில் அழுத்தம் இருக்கும். உங்கள் கடின உழைப்பு இங்கு அழைத்து வந்துள்ளது. இதனை மற்றும் ஒரு விளையாட்டு தொடராக எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும். நூறு சதவீத திறனை வெளிப்படுத்தினால் போதுமானது” என பி.வி.சிந்து தெரிவித்தார்.
அவரை போலவே பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்காக வெளிநாட்டில் தங்கி பயிற்சி எடுத்து வரும் தடகள வீரர் நீரஜ் சோப்ரா, குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் ஆகியோரும் பிரதமருடன் காணொளி அழைப்பு மூலமாக பேசி இருந்தனர்.
ஜூலை 26-ல் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும். இதில், பல விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் களமிறங்குகிறார்கள். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
+ There are no comments
Add yours