பார்படாஸ்: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 176 ரன்களைச் சேர்த்து 177 ரன்கள் என்ற சற்றே கடினமான வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
பார்டாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி ஓப்பனராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கேசவ் மஹாராஜ் வீசிய 2வது ஓவரில் கேட்ச் கொடுத்து 9 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அவருக்கு அடுத்து வந்த ரிஷப் பந்து அதே ஓவரில் டக்அவுட்டானது அதிர்ச்சி. சோகம் நீண்டுகொண்டே செல்ல அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 3 ரன்களில் விக்கெட் ஆக 5 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 41 ரன்களைச் சேர்த்தது.
விராட் கோலி மட்டும் தனியே நிலைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருடன் கைகோத்த அக்சர் படேல் 2 சிக்சர் விளாசி உற்சாகம் கூட்டினார். இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 75 ரன்களைச் சேர்த்தது.
4 சிக்சர்கள் விளாசி சிறப்பாக விளையாடி வந்த அக்சர் படேல் 14-வது ஓவரில் 47 ரன்களுக்கு ரன் அவுட். அடுத்து வந்த ஷிவம் துபே, விராட் கோலிக்கு துணை நின்றார். மறுபுறம் பொறுப்பாக விளையாடி 48 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் கோலி. 2 சிக்சர்கள், 6 பவுண்டரிகளை விளாசிய அவர் 19-வது ஓவரில் கேட்ச் கொடுத்து 76 ரன்னில் விக்கெட்டானார். இருப்பினும் கோலியின் இந்த ஆட்டம் அணிக்கு பக்கபலமாக விளங்கியது.
களத்துக்கு வந்த ஹர்திக் பாண்டியா வந்ததும் ஃபோர் அடித்து தன் வரவை பதிவு செய்தார். இறுதி ஓவரில் ஷிவம் துபே 27 ரன்களுக்கும், ஜடேஜா 2 ரன்களுக்கும் விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 176 ரன்களைச் சேர்த்தது.
தென் ஆப்பிரக்க அணி தரப்பில் கேசவ் மஹாராஜ், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன், ரபடா, ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சாதிக்குமா இந்திய அணி? – டி20 உலகக் கோப்பையின் அறிமுக தொடரான 2007-ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி அதன் பின்னர் ஒரு முறை கூட மகுடம் சூடவில்லை. அதேவேளையில் ஐசிசி தொடர்களில் கடைசியாக இந்திய அணி 2013-ம்ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது. அதன் பிறகு 11 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும்பட்சத்தில் அது தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு சிறப்பான வழியனுப்பு விழாவாக அமையக்கூடும். ஏனெனில் இந்த தொடருடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்லாத தென் ஆப்பிரிக்க அணி இம்முறை மிகுந்த நம்பிக்கையுடனும், ஏராளமான கனவுகளுடனும் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.
+ There are no comments
Add yours