டி20 உலகக் கோப்பையில் நேற்று டலாஸில் நடைபெற்ற குரூப் ஏ போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அதிர்ச்சித் தோல்வியடையச் செய்தது அமெரிக்க அணி (யுஎஸ்ஏ). இரு அணிகளும் 159 ரன்களில் மேட்ச் டை ஆக, ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. அதில் அமெரிக்க அணி 18 ரன்களை எடுக்க பாகிஸ்தான் அணி 13 ரன்களையே எடுத்து படுதோல்வி கண்டது. அட்டகாசமான சூப்பர் ஓவரை வீசியவர் நெட்ராவல்கர் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர், இவர் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர்.
யுஎஸ்ஏ அணி ஏற்கெனவே ஐசிசி முழுநேர உறுப்பினர் அணியான அயர்லாந்து, மற்றும் வங்கதேச அணிகளை டி20 தொடரில் வெற்றி பெற்றதோடு இப்போது பாகிஸ்தானையும் வீழ்த்தி அசத்தியுள்ளது. இந்த வெற்றியில் மும்பையைச் சேர்ந்த கணினி பொறியாளர் சவுரவ் நரேஷ் நெட்ராவல்கர் முழு நேர ஆட்டத்தில் தனது அற்புதமான இடது கை வேகப்பந்து வீச்சின் மூலம் 4 ஓவர்களில் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, சூப்பர் ஓவரில் பாகிஸ்தானின் அதிரடி வீரர்களான இப்திகார் மற்றும் சதாப் கானை வெற்றி பெற முடியாமல் முடக்கி தன் அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார்.
நெட்ராவல்கருக்கு இப்போது வயது 32 ஆகிறது. இவர் அமெரிக்காவுக்குக் கம்ப்யூட்டர் இன்ஜியரிங் மாஸ்டர்ஸ் டிகிரி படிப்புக்காகச் சென்றார். இப்போது யுஎஸ்ஏ அணியின் முக்கியமான வீரராகத் திகழ்ந்து வருகிறார்.
2010-ல் யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த காலிறுதியில் 23 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்தது. அந்த அணியில் நெட்ராவல்கர் இருந்தார். அப்போது 5 ஓவர்கள் வீசி 16 ரன்களையே விட்டுக்கொடுத்து அகமது ஷேசாத் விக்கெட்டை கைப்பற்றினார்.
இவர் விளையாடிய அந்த அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், மந்தீப் சிங், அசோக் மெனாரியா (கேப்டன்), பவுலர்கள் சந்தீப் சர்மா, ஜெயதேவ் உனாட்கட் ஆகியோர் இருந்தனர். மேலும் முக்கியமாக பாகிஸ்தான் யு-19 அணியில் இப்போதைய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இருந்தது குறிப்பிடத்தக்கது. அன்று சந்தீப் சர்மாவின் இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார் பாபர் அசாம்.
இன்று அது நடந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா கிரிக்கெட் அணிக்காக பாகிஸ்தானை அதே பாபர் அசாம் தலைமையில் எதிர்கொண்டார் நெட்ராவல்கர் பந்து வீச்சையும் எதிர்கொண்டார். நெட்ராவல்கர் இந்தியாவுக்காக ஆட பெரிதும் பிரயத்தனப்பட்டார்.
2009-ல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் யுவராஜ் சிங்கை கிளீன் பவுல்டு செய்து அசத்தினார். இவர் யுவராஜ் சிங், ரெய்னா, ராபின் உத்தப்பாவுடன் ஓய்வறையைப் பகிர்ந்து கொண்டவர். அப்போது இவர் ஆடிய எதிரணியில் விராட் கோலி, தோனி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அப்போது 18 வயது கூட நிரம்பாத நெட்ராவல்கர் அந்த டோர்னமெண்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் நியூஸிலாந்தில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பைக்கு தேர்வானார். அந்த உலகக் கோப்பையில் இவர்தான் இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்.
மும்பை அணியில் நுழைந்திருக்க வேண்டும். ஆனால் ஜாகீர் கான், அஜித் அகார்கர், அவிஷ்கா சால்வி, பிறகு வளரும் பவுலராக அப்போது பேசப்பட்ட தவால் குல்கர்னி ஆகியோர்களின் போட்டிக்கு முன்னால் நெட்ராவல்கர் உள்ளே நுழைய முடியாமல் போனது.
2013-ல் ரஞ்சியில் வாய்ப்புக் கிடைத்தது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு கிரிக்கெட்டே கதி என்று இருந்தாலும் இவரால் அணிக்குள் நுழைய முடியாமல் போனது. 2015-ல் கார்னெல் பல்கலைக் கழகத்தில் இருந்து இவருக்கு அழைப்பு வந்தது. இவரது தொழில்நுட்பக் கல்வித் தகுதி மற்றும் திறன், கிரிக்கெட் மீதான ஆர்வம் ஆகியவற்றினால் உந்தப்பட்டு பிளேயர் அனாலிசிஸ் செயலியான CricDecode என்பதை உருவாக்கினார்.
இது இவருக்கு ஸ்காலர்ஷிப்பைப் பெற்றுத் தந்தது. சான்பிரான்சிஸ்கோவில் ஆரக்கிள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. உயரமான பவுலர், நல்ல பவுலர் ஒருவரை இந்திய அணி இழந்து விட்டது என்பது வருத்தத்தை அளித்தாலும் அவர் இந்தியாவுக்கு எதிராக டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆடும் வாய்ப்புப் பெற்றதை நிச்சயம் பெருமையாகக் கருதுவார்.
+ There are no comments
Add yours