டி20 உலககோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானின் அணிகள் மோதிய அமெரிக்க கிரிக்கெட் மைதானம் நாளை தகர்க்கப்பட உள்ளது.
நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் உள்ள ஐசன்ஹோவர் பூங்காவில் அமைந்துள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாதது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய வகையில் உலகமெங்கும் இந்த மைதானம் கவனம் பெற்றுள்ளது.
ஆனால் நடந்துகொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையின் எட்டு ஆட்டங்களுக்குப் பிறகு, இந்த மைதானம் நாளை (ஜூன் 14) அகற்றப்பட இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடும். வெறும் ஐந்தே மாதங்களில் கட்டப்பட்ட வகையிலும், இந்த கிரிக்கெட் மைதானம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானது.
கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத்தவர்கள் அதன் கட்டமைப்பில் பவுலர்களுக்கு சாதகமானதாக உருவாக்கியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இந்த மைதானத்தை தகர்க்கவும், இதன் பகுதி பொருட்களைக் கொண்டு மற்றொரு பகுதியில் கட்டப்பட்டு வரும் கோல்ஃப் மைதானத்துக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே அமெரிக்க விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் கிரிக்கெட் ஆட்டத்தை முழுமையாக கொண்டு சேர்க்கவும், இளம் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறவும் அடிப்படையான கிரிக்கெட் தளம் அங்கே அப்படியே இருக்கும் என்றும், ஸ்டேடியத்தின் பிரமாண்ட கட்டுமானங்கள் மட்டுமே பிரித்தெடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறு பிரிக்க முடியாதவற்றை தகர்க்கவும் முடிவாகி உள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் குரூப் ஏ போட்டி இந்த மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஆட்டமாகும். புதன்கிழமை, சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4-9 என்ற கணக்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார், இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 கட்டத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours