இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடர் இன்று தொடக்கம்.

Spread the love

டர்பன்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றிருந்தது.

இந்த தொடரின் கடைசி ஆட்டத்தில் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111 ரன்களை விளாசி அசத்தியிருந்தார். இதனால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். அதேவேளையில் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா நெருக்கடியுடன் களமிறங்குகிறார். ஏனெனில் கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்திய அபிஷேக் சர்மா, அதன் பின்னர் பங்கேற்ற 6 ஆட்டங்களில் முறையே 0, 10, 14, 16, 15, 4 ரன்களில் நடையை கட்டினார்.

அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் அபிஷேக் சர்மா. இதே நிலையில் தான் திலக் வர்மாவும் உள்ளார். 2023-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது அறிமுக தொடரில் கவனம் ஈர்த்த திலக் வர்மாவிடம் இருந்து அதன் பின்னர் பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படவில்லை. கடைசியாக விளையாடிய 12 ஆட்டங்களில் திலக் வர்மா ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கிய திலக் வர்மா அதன் பின்னர் தற்போதுதான் சர்வதேச டி20-ல் விளையாட உள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours