இன்று இந்தியா, நியூசிலாந்து பலப்பரீட்சை..! வீழ்த்தப்போவது யார் ..?

Spread the love

உலகக்கோப்பை தொடரின் இன்றைய 21 லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இன்று பிற்பகல் 2மணிக்கு நடைபெறும் இப்போட்டி மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில், ஒருபுறம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மீண்டும் தர்மஷாலா மைதானத்தில் மோதுகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 16 தேதி அன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒருநாள் போட்டி தர்மஷாலா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 43.5-வது ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் இறங்கிய இந்திய அணி 33.1-வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

மறுபுறம் நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத அணிகளுக்கிடையே இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. 2023 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே தோல்வியை சந்திக்கவில்லை. இந்த இரு அணிகளை எந்த அணியும் இதுவரை தோற்கடிக்க முடியவில்லை. நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் தங்கள் முதல் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் சிறந்த ரன் ரேட் காரணமாக, நியூசிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. இந்தியா புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

இதனால் இந்தியா – நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி தர்மஷாலா மைதானத்தில் நடைபெறுகிறது. தர்மஷாலா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். இங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் திறமையை பயன்படுத்திக் கொள்ளலாம். பேட்ஸ்மேன்களுக்கு ஒரு நல்ல மைதானமாகும். இந்த மைதானம் மற்ற மைதானங்களை விட சிறியதாக இருப்பதால், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர் எளிதாக அடிக்கலாம். இந்த உலகக்கோப்பையில் இதுவரை இந்த மைதானத்தில் மொத்தம் 3 போட்டிகள் நடந்துள்ளன. இதில் அதிகபட்சமாக 364 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த ஸ்கோராக 156 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இந்த மைதானத்தில் பனி வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு அதிக நன்மை உள்ளது. இந்த காரணங்களைப் பார்க்கும்போது ​​நாளை டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச முடிவு செய்யும் என தெரிகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 116 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா 58 போட்டிகளிலும், நியூசிலாந்து 50 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் இருந்த நிலையில் ஏழு போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. ஒருநாள் உலகக்கோப்பையையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே 9 போட்டிகள் நடந்துள்ளன.

இதில் நியூசிலாந்து அணி 5 வெற்றிகளையும், இந்தியா மூன்று போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு லீக்போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளும் கடைசியாக 2019 உலகக்கோப்பையின் அரையிறுதியில் சந்தித்தது. இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்தியா கடைசியாக 2003 உலகக்கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதற்குப் பிறகு ஒருநாள் உலகக்கோப்பையில் நேரடியாக 2019 -ஆம் மட்டுமே மோதியது என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours