பிரிட்ஜ்டவுனில் நேற்று நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதித்தள்ளி தொடரை 2-1 என கைப்பற்றியது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ரன்கள் என்று தட்டுத்தடுமாறி பிறகு பில் சால்ட்டின் 74 ரன்களால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து மரியாதைக்குரிய இலக்கை நிர்ணயித்தது. ஜோப்ரா ஆர்ச்சர் தன் மட்டை வீச்சுத் திறனைக் காண்பித்து 38 ரன்களை 17 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் விளாச ஜேமி ஓவர்டன் 21 பந்துகளில் 32 ரன்களையும் புதுமுக வீரர் டேன் மவுஸ்லி 57 ரன்களையும், சாம் கரன் 40 ரன்களையும் எடுத்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் அல்சாரி ஜோசப், ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மேத்யூ ஃபோர்டு 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பேட்டிங்கில் பிரமாதமாக ஆடிய ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் நேற்று சாத்து வாங்கினார். 9 ஓவர்கள் வீசி 54 ரன்களை விட்டுக்கொடுத்தார். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் பிராண்டன் கிங், 13 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 117 பந்துகளில் 102 ரன்களை விளாச, கேசி கார்ட்டி 114 பந்துகளில் 15 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 128 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ இருவரும் சேர்ந்து 209 ரன்களை 2-வது விக்கெட்டுக்குச் சேர்த்தனர். வழக்கமாக இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கும் எவின் லூயிஸ் நேற்று 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் லியாம் லிவிங்ஸ்டன் சதம் எடுத்து தொடரை 1-1 என்று சமன் செய்த நிலையில், நேற்று முதல் 10 ஒவர்களில் விழுந்த 4 விக்கெட்டுகளில் ஒருவராக வெளியேற்றப்பட்டார். சாம் கரன், பில் சால்ட் இணைந்து 70 ரன்கள் கூட்டணி அமைத்து இங்கிலாந்தை மீட்டனர். டேன் மவுஸ்லியின் முதல் அரைசதம் இங்கிலாந்தை அதன் பாதைக்குத் திருப்பியது.
மேற்கு இந்தியத் தீவுகளின் ரொமாரியோ ஷெப்பர்ட் காயம் காரணமாக வெளியேற ஷெர்பானி ரூதர்போர்ட் பந்து வீச வந்தார், அங்கிருந்து பிடித்தது இங்கிலாந்துக்கு பேயாட்டம். இந்த ருதர்போர்டின் 23 பந்துகளில் 57 ரன்களை விளாசியது இங்கிலாந்து, ஜோப்ரா ஆர்ச்சர் 17 பந்துகளில் 38 ரன்களை விளாசி தள்ளினர்.
இங்கிலாந்து அணியில் ஜேமி ஒவர்டன் எவின் லூயிஸ் விக்கெட்டை விரைவில் எடுத்தார், ஆனால் கார்ட்டி மற்றும் பிரண்டன் கிங் சதங்கள் இங்கிலாந்தின் நம்பிக்கைக்கு ஆணியறைந்தது. இங்கிலாந்து பக்கமும் தவறு உள்ளது, பிராண்டன் கிங்கிற்கு 2 கேட்ச் வாய்ப்புகளைத் தவற விட்டனர். மேலும் கிங்-கார்ட்டி கூட்டணியின் 209 ரன்கள் கூட்டணிதான் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகளின் அதிக ரன் கூட்டணியாகும்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் நடந்த ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் சொதப்பியதையடுத்தே 3-வது ஒருநாள் தொடரை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours