சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
37 வயதான அஸ்வின், கடந்த 2010 முதல் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 3309 ரன்கள் மற்றும் 516 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
அடுத்த சில நாட்களில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்காக ஆயத்தமாகி வருகிறார். இந்த தொடரின் முதல் போட்டி சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து நியூஸிலாந்து அணியுடன் உள்நாட்டிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரிலும் இந்தியா விளையாட உள்ளது. இதில் அஸ்வினின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.
“இப்போதைக்கு நான் ஓய்வு குறித்து எதுவும் யோசிக்கவில்லை. வயதாகும் போது கூடுதல் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக களத்தில் தீவிர பயிற்சி மற்றும் முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இருந்தாலும் போதும் என்ற எண்ணம் வரும்போது நான் ஓய்வு பெற்று விடுவேன்.
எனக்கு நானே எந்தவித டார்கெட்டும் செட் செய்து கொள்ளவில்லை. ஏனெனில், அதன் மூலம் ஆட்டத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றை இழக்க விரும்பவில்லை. நாங்கள் எல்லோரும் அணிக்குள் வருகிறோம், விளையாடுகிறோம், வெளியேறுகிறோம். அந்த பணியை செய்ய மற்றொருவர் வருவார். அதுதான் இந்திய கிரிக்கெட்” என தனது பேச்சால் அஸ்வின் ஈர்க்கிறார்.
+ There are no comments
Add yours