ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை ஈட்டிய முதல் அணி என்ற சிறப்பை பெற்றது இந்தியா.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், 1-1 என்ற சமநிலையில் 3வது போட்டியை இரு அணிகளும் எதிர்கொண்டன. ஹராரே நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ஷூப்மன் கில் இணை சிறப்பான தொடக்கம் கொடுத்தது.
9-வது ஓவரில் ஜெய்ஸ்வால் 36 ரன்களுக்கு விக்கெட்டானார். அடுத்து வந்த அபிஷேக் சர்மா 10 ரன்களுக்கு அவுட்டாக, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய 66 ரன்களைச் சேர்த்து அசத்தினார். ருதுராஜ் 49 ரன்களில் விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 182 ரன்களை சேர்த்தது.
183 வெற்றி இலக்கை துரத்திய ஜிம்பாப்வேவின் ஓப்பனர் வெஸ்லி 1 ரன்னுக்கு அவுட்டானார். தடிவானாஷே 13 ரன்களுக்கும், பிரையன் பென்னட் 4 ரன்களுக்கும் விக்கெட்டாக, ஜிம்பாப்வே தடுமாறியது. சிக்கந்தர் ராசா 15 ரன்களிலும், ஜொனாதன் காம்ப்பெல் 1 ரன்னிலும் கிளம்பினர். டியான் மியர்ஸ் 65 ரன்களையும், கிளைவ் மடாண்டே 37 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
மற்றவர்கள் யாரும் சோபிக்காத நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே 159 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற நிலையில் டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி தரப்பில், வாஷிங்கடன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும். அவேஷ் கான் 2, கலீல் அகமது 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
+ There are no comments
Add yours