துபாய்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி.
துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. பெத் முனி 44, தஹிலா மெக்ராத் 27, எல்லிஸ் பெர்ரி 31 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சாளர்கள் திட்டமிட்டபடி பந்து வீசி ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.
135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. கேப்டன் லாரா வால்வார்ட் மற்றும் அன்னேக் போஷ் ஆகியோர் இணைந்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது தென் ஆப்பிரிக்கா.
17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டி அசத்தியது. 16 பந்துகள் எஞ்சி இருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை அரங்கில் ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்துள்ளது. கடந்த முறை டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸி.
நேற்றைய தினம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு பொன்னான நாளாக அமைந்தது. அந்த அணி இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அல்லது நியூஸிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இந்த ஆண்டு ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிப் போட்டியின் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. அதை மகளிர் அணி முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours