புது டெல்லி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரது திறமையே காரணம். அதாவது, அனைத்து விதமான பிட்ச்களிலும் யஷ் அருமையாக வீசக் கூடியவர். பந்துகளை இருபக்கமும் ஸ்விங் செய்யக் கூடியவர். இதோடு ஸ்விங்கைக் கட்டுப்படுத்துவதில் பெரிய வல்லமை கொண்டவர். புதிய பந்திலும் ஸ்விங் செய்வார். பழைய பந்திலும் ஸ்விங் செய்வார்.
இதோடு அவர் உருவாக்கும் கோணங்கள் வலது, இடது கை இரண்டு தரப்பு பேட்டர்களுக்கும் கடும் சோதனைகளைக் கொடுக்கக் கூடியது. இதோடு பெரிய யார்க்கர்கள், தேவைப்பட்டால் ஸ்லோ பந்துகள், டி20 ஆயுதமான ‘நக்கிள்’ பந்துகள் என்று பல தினுசுகளை மூளையில் வைத்து விரல்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்தும் அசாத்திய திறமை கொண்டவர் யஷ் தயாள்.
நடைபெற்று வரும் துலீப் கோப்பைத் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியா ஏ அணி 275 ரன்களைச் சேஸ் செய்த போது ரியான் பராக், செம அட்டாக்கிங் மூடில் இறங்கி, முகேஷ் குமாரை இரண்டு சிக்ஸ்களை விளாசினார். பிறகு தயாளையும் ஒரு சிக்ஸ் விளாசினார். 17 பந்துகளில் 31 ரன்கள் என்று விரைவு கதியில் அச்சமூட்டினார். அப்போதுதான் யஷ் தயாள் ரவுண்ட் த விக்கெட்டில் வீசுகிறேன் என்று கேப்டனிடம் கூறிவிட்டு அதற்குத் தக்க களவியூகத்தையும் அமைத்தார்.
ரவுண்ட் த விக்கெட்டில் வைடு ஆஃப் த கிரீசில் சென்று பந்தை லெந்த்தில் சரியாக பிட்ச் செய்து லேசாக வெளியே ஸ்விங் செய்தார். அதாவது ரன்னர் முனை ஸ்டம்புகளிலிருந்து வீசும் கை விலகிச் செல்லுமாரு ஒரு கோணத்தில் பந்தை உள்ளே செலுத்தி லேசாக ஸ்விங் செய்ய ரியான் பராக் பந்தை தொட்டார் கெட்டார். ரிஷப் பண்ட்டிடம் கேட்சை எடுக்க பராக் கதை முடிந்தது. இவரோடு அல்லாமல் அகர்வால் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் விக்கெட்டுகளையும் தயாள் கைப்பற்றினார். ஆனால் பராக் விக்கெட் தான் அங்கு டர்னிங் பாயிண்ட். பராகின் பேட்டிங்கையும் அங்கு பாராட்டித்தான் ஆகவேண்டும். கடினமான பிட்சில் ஆக்ரோஷமாக ஆடி அதில் வெற்றியும் கண்டார் என்றால் சாதாரணமல்ல. அவரை வீழ்த்த யஷ் தயாள் மேற்கொண்ட உத்தியும் தயாளின் பவுலிங் சாமர்த்தியத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
இதனையடுத்துத்தான் அவரை வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் அணியில் தேர்வு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் கணக்கில் கொண்டுதான் யஷ் தயாள் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சு என்பது ஒரு சாதகமான அம்சம். அதனால்தான் அர்ஷ்தீப் சிங், கலீல் அகமத், யஷ் தயாள் ஆகியோருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 2018-19 சீசனில் தயாள் உத்தரப் பிரதேச அணிக்காக முதல் தரக் கிரிக்கெட்டில் ஆடத் தொடங்கினார்.
அறிமுக சீசனிலேயே 24.70 என்ற சராசரியில் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ராவின் மாணவர் யஷ் தயாள், என்பதால், அவர்களிடமிருந்து நெருக்கடியான சூழ்நிலைகளை டி20-யில் சமாளிக்கக் கற்றுத்தேர்ந்தவர். ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங்கிடம் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை வாங்கி அவமானப்பட்டவர். அதன் பிறகு கடந்த ஐபிஎல் தொடரில் எழுச்சி கண்டார். தோனியை ஸ்லோ பந்தில் காலி செய்ததன் மூலம் ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது நினைவிருக்கலாம். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இடது கை ஸ்விங் பவுலர் டி.நடராஜன் அசத்தினார். இந்த முறை யஷ் தயாளுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
+ There are no comments
Add yours