நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. முதல் 4 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, 4-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகித்ததோடு தொடரையும் வென்றது. இதையடுத்து கடைசி மற்றும் இறுதிப் போட்டி ஹேக்லி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 38 ரன்களும், மகர சமான் 33 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் செளத்தி, மேட் ஹென்றி, லொக்கி பெர்குசன், இந்தர்பிர் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இதை அடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது.
அந்த அணியில் நட்சத்திர வீரர் ஃபின் ஆலன் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க துவங்கினர். பிலிப்ஸ் மட்டும் சற்று நேரம் போராடி 26 ரன்கள் சேர்த்தார். 17.2 ஓவர் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டும் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் மூலம் இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி, முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். 4-1 என்ற கணக்கில் கோப்பையை நியூசிலாந்து வென்றது.
+ There are no comments
Add yours