வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் !
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்தசிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது ஸ்ரீமதுரை ஊராட்சி. இங்குள்ள சேமுண்டி கிராமத்தில் இடும்பன்என்பவர் வசித்து வருகிறார். சனிக்கிழமை இவரது வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. அப்போது வெளியில்சென்றிருந்த இடும்பன், வீட்டுக்குத் திரும்பி வந்த போது வீட்டுக்குள் உறுமல் சப்தம் கேட்டதும் மிரண்டுபோயிருக்கிறார். வீட்டுக்குள் சிறுத்தை இருப்பதை உறுதி செய்துகொண்ட இடும்பன், உடனடியாக வீட்டைபூட்டிவிட்டு கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்தனர். இது குறித்து நம்மிடம் பேசிய இடும்பன், “நான் தேயிலை தோட்டத்துல வேலைசெய்துவிட்டு மதியம் 12 மணி அளவில் வீட்டுக்குச் சென்றேன். அப்போது என்னுடைய வீட்டுக்குள் உறுமல் சப்தம்கேட்டது. என்னவென்று எட்டிப் பார்த்தபோது, வீட்டுக்குள் சிறுத்தை இருந்தது. என்னைக் கண்டதும், அது என் மேல்பாயப் பார்த்து. நான் சுதாரித்து, பயந்து ஓடிவந்து வெளிக்கதவை பூட்டி விட்டேன்” என்றார். இந்நிலையில், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்திசிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.