கருக்கா வினோத்துக்கு 3 நாள் போலீஸ் காவல் – ‘ஆளுநரை மாத்தணும்’ என முழங்கியதால் பரபரப்பு

Spread the love

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வர முடியாதபடி, அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வினோத், நீதிமன்ற காவலில் 26-ம் தேதி அதிகாலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் உள்ளதால் பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணத்தை போலீஸாரால் உடனடியாக தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம், பின்னணியில் உள்ளவர்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை பெறுவதற்காக வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர்.

அதன்படி, வினோத்தை 15 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிண்டி போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணைக்காக கைதான ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது கருக்கா வினோத்தை 15 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கிண்டி காவல்துறை அனுமதி கோரியது. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட கருக்கா வினோத் போலீஸ் வாகனத்தை விட்டு இறங்கியதும் ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள குற்றவாளிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும்’ என கைகளைத் தூக்கி முழக்கமிட்டபடி நீதிமன்றத்துக்குள் சென்றார். இதேபோல், விசாரணை முடிந்து மீண்டும் புழல் சிறைக்கு செல்வதற்காக அழைத்துவரப்பட்ட போதும், “தமிழ்நாட்டு கவர்னரை கண்டிப்பா மாத்தணும்… முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கணும்” என்று முழக்கமிட்டபடி சென்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours