தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடிபிடித்துள்ள நிலையில், சில தலைவர்கள் ஆத்திரத்தின் உச்சத்தில் உணர்ச்சிவசப்பட்டு தரம் தாழ்ந்து பிரச்சாரம் செய்வதும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அப்படித்தான் நாம் தமிழர் கட்சியின் சீமானும் கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்திருக்கிறார். இதற்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, “தேர்தல் மேடைகளில், மறைந்த தலைவர்களை இழிப்பதும் பழிப்பதும் ஏற்கத்தக்கவை அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் தனித்தே போட்டியிடுகிறது. 40 தொகுதிகளிலும் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இந்நிலையில், கடந்த மார்ச் 29-ம் தேதி ராமநாதபுரம் வேட்பாளரை ஆதரித்து பேசிய சீமான், திருடன் கதையைச் சொல்லி, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் குறித்து தரக்குறைவான வார்த்தைகளில் பேசினார். இதற்கு திமுகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
சீமானின் பேச்சைக் கண்டித்து சுப.வீரபாண்டியன் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி போன்றோர் குறித்த பேச்சை சீமான் திரும்பப் பெற வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பரும், கவிஞருமான வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘ஜப்பானில் நிலநடுக்கமும், இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பும், தேர்தல் மேடைகளில் இழிமொழிகளும் அபூர்வமல்ல. ஆனால், மறைந்த தலைவர்களை இழிப்பதும் பழிப்பதும் ஏற்கத்தக்கவையல்ல.
சிறுகூட்டம் ரசிக்கும்; பெருங்கூட்டம் வெறுக்கும். மேடை நாகரிகமும் உள்ளிட்டதே தமிழர் பண்பாடு’ என்று சாடி இருக்கும் வைரமுத்து, கருணாநிதி குறித்த தரக்குறைவான சீமான் பேச்சையும் தனக்கே உரிய கவிதை மொழியில் கண்டித்துள்ளார்.
+ There are no comments
Add yours