திமுகவைக் கண்டித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் பாஜக நிர்வாகி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து தமிழக பாஜகவின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மத்திய சென்னைமாவட்ட தலைவர் கே.விஜய் ஆனந்த் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை சார்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில் முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீஸார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் திரண்டு, திமுகவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவல்லிக்கேணி அயோத்தி நகரில், வாக்காளர் சரிபார்ப்பு முகாமில் இதர கட்சி நிர்வாகிகளை போலவே, பாஜக மண்டல துணைத் தலைவர் சுமன்உட்பட 4 பேர் மேசை அமைத்து பொதுமக்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திமுக நிர்வாகிகள் பாஜகவின் மேசையை எட்டி உதைத்து,சுமன் மற்றும் இதர நிர்வாகிகளையும் தாக்கியுள்ளனர். காயமடைந்த சுமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்தை ஒட்டி காவல்துறை சார்பில் வழக்குப் பதிவுசெய்யப்பட்ட நிலையிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. பாஜக நிர்வாகியை தாக்கியதற்கு வீடியோ ஆதாரம்உள்ளது. எனவே இச்சம்பவத்துக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டாலும், நீதிமன்றம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீஸார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்திய நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்ததையடுத்து மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
+ There are no comments
Add yours