தூய்மை பணியாளர்களுக்கு ஒரு சல்யூட்!

Spread the love

இது வரலாறு காணாத மழை தான். ஆனால், வரலாறு காணாத துயரை துடைத்து எறிந்துள்ளனர் சென்னை மாநகரின் தூய்மைப் பணியாளர்கள். கடந்த ஓரிரு நாட்களில் இவர்களது பங்களிப்பு வரலாற்றில் இடம்பெற வேண்டியவை. தங்கள் உடல் ஆரோக்கியத்தை பணயம் வைத்து சென்னையின் ஆரோக்கியத்தை இவர்கள் மீட்டெடுத்துள்ளனர். இதற்கு தகுந்த சன்மானமும், கௌரவமும் இவர்களுக்கு தமிழ் நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அளிக்க வேண்டும் என்பது நமது பணிவான வேண்டுகோள்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், ஊரில் இருந்து ஒதுக்கப்பட்டவர்கள், சாதியின் அடிப்படையில் பட்டியலினத்தவர்கள், வாழும் புவியியல் அடிப்படையில் சேரி மக்கள்… சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் அன்பான என்ற பொருள் என சமீபத்திய சர்ச்சை ஒன்றில் குஷ்பூ குறிப்பிட்டிருந்தார். தமிழில் கூட சேரி என்றால் கெட்ட வார்த்தை அல்ல. சங்க காலத்தில் சேரி என்ற சொல் முல்லை நிலத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் வாழும் பகுதி என அறியப்படுகிறது .

எளிய மக்களின் வாழ்விடமாக மாறிய பிறகு தான் சேரி என்பது அசுத்தமான இடமாகவும், மட்டமான கண்ணோட்டத்தில் காணப்படும் நிலையும் உருவாகி இருக்கிறது.

மாநகரை சுத்தம் செய்த ‘அன்பான’ மக்கள்:

சரி! இன்று ஒட்டுமொத்த சென்னையே மழை நீரில் மூழ்கி அசுத்தமாகி இருக்கிறதே, அதை சுத்தம் செய்வது யார்? இதே ‘அன்பான’ மக்கள் தான். கொட்டித் தீர்த்த மழையில், சூறாவளி காற்றில் தன் வீடு/குடிசையின் நிலை என்ன என்ற கவலையை ஒதுக்கி வைத்துவிட்டு, தன்னை ஒதுக்கி வைத்து பார்க்கும் ஒட்டுமொத்த இடங்களையும் இறங்கி வேலை பார்த்து சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர் இந்த புண்ணியவான்கள்.

மழைநீர் இவர்கள் வீட்டுக்குள் புகுந்தாலும், எடுத்து செல்லவோ, அழித்து செல்லவோ இவர்களிடம் செல்வமென பெரிதாய் ஏதுமில்லை. ஆனால், இன்று (என்றும்) ஒட்டுமொத்த மாநகரும் செல்வம்போல தரம் உயர்ந்து நிற்க அஸ்திவாரமாக இருப்பதே இவர்களது கடின உழைப்பின் காரணத்தால் தான்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்:

நீருக்குள் மூழ்கியிருக்கும் மாநகரை மீட்டெடுக்கும் போராட்டத்தில் இறங்கிய முன்கள பணியாளர்களான இவர்களை நிச்சயம் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கௌரவிப்பார் என்பதை எதிர்பார்க்கலாம்.

நேற்றைய கட்டுரை ஒன்றில், அரசு முறையான ஆய்வுகள் மேற்கொண்டு, இனி வருங்காலத்தில் சென்னைக்கு இந்நிலை ஏற்படாதபடி திட்டங்கள் வகுத்து செயற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இது வரலாறு காணாத மழை தான். ஆனால், வரலாற்றில் இதன் தாக்கத்தை கொஞ்சம் குறைந்து இடம்பெற முக்கிய காரணம், இந்த முன்கள பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள் என்பதை நாம் மறந்துவிட கூடாது.

தூய்மைப் பணியாளர்கள் இன்றி அமையாது மாநகர்:

‘ரெட் அலர்ட்’ கொடுத்து மக்கள் அனைவரையும் வீட்டில் இருக்க கூறியது அரசு. அந்த சமயத்திலும், தன் குடும்பத்தைவிட்டு சாலையில் இறங்கி, சென்னையின் பல இடங்களில் நீர் தேக்கங்களை துரிதமாக சரிசெய்ய இவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி அபரிமிதமானது.

சென்ற மாதம் அரசு இவர்களுக்கு தீபாவளி போனஸ் அளித்திருக்கும். ஆனால், இந்த மாதம் நிச்சயம் இவர்களது கடின உழைப்புக்கு சான்றாக தகுந்த சன்மானம் மற்றும் உரிய கௌரவத்தை அளிக்க வேண்டும் என்பதே நாம் முன்வைக்கும் வேண்டுகோள்.

மழையில் வீட்டில் அடைப்பட்டிருப்பதே கஷ்டமாக உணர்வும் மனநிலையின் இடையே, இடுப்பு வரை நீர் தேங்கி இருந்த சாலைகளில் இவர்கள் உயிரை பணயம் வைத்து உழைத்துள்ளனர்.

மின்சாரம் துண்டிப்பு அவசியம் என்பதை அறியாத அதிமேதாவிகள்:

தூய்மை பணியாளர்களை போலவே, மின்சாரத் துறை ஊழியர்களின் பங்கும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. மின்சாரம் இல்லை, இன்டர்நெட் இல்லை என எளிதாக அரசுமீது குறை கூறிவிடலாம். சூறாவளி மழையில் மின் இணைப்பு துண்டிக்கபட வேண்டும் என்பது அடிப்படையான விஷயம்.

நீர் தேங்கி இருக்கும் இருக்கும் இடத்தில் மின்சார கம்பி அறுந்து விழுந்தது அதனால் உயிரிழப்பு நேரிடும் அபாயம் என்பது மிக பெரியது. இதைக்கூட அறியாமல், சில அதிமேதாவிகள், மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகிறோம் என குறைகூறுவது அவர்களது அறிவிலித்தனத்தை தான் மேற் கோடிட்டு காட்டுகிறது.

குட்டு வைக்க மறவாதே என் தமிழ் சமூகமே:

2015 உடன் ஒப்பிடுகையில் சற்றும் குறைவில்லாத தாக்கத்தையும், மழை நீர் அளவையும் கொட்டித் தீர்த்துள்ளது. ஆனால், விடியல் நேரம் என்பது நீட்டிக்கப்பபடாமல், வேகம் கூட்டப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.

இந்நிலையில் அரசியல் செய்வது ஒரு பாவச்செயல் என்பதை அரைகுறை அரசியல் விமர்சகர்களும், பணத்தை வாங்கி கொண்டு குரல் கொடுப்பவர்களுக்கு மக்கள் பெரும் குட்டு வைக்க வேண்டும், இது வேண்டுகோள் அல்ல, நமது கடமை.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours