ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிரான மனு ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில் மேல்முறையீட்டு வழக்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில்தான் இன்று (ஜன.5) தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
மேலும், ஒரு அமைச்சரை பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட் நடவடிக்கை சரியானதே. எனவே, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர தடையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
வழக்கின் பின்னணி:
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைசட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர், மருத்துவமனையில் இதயஅறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது, புழல் சிறையில் அவர் மீண்டும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்த உத்தரவை, சில மணி நேரங்களில் அவரே நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
தமிழக அரசின் அரசாணை மற்றும் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும். அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
+ There are no comments
Add yours