அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – இன்று ஐகோர்ட்டில் விசாரணை!

Spread the love

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு திமுகவினர் மற்றும் அவர்களது கூட்டணி கட்சியினர் கொந்தளித்தனர். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது நீதிமன்றக் காவல் 6 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் 7வது முறையாக நீடிக்கப்பட்டு சிறையில் உள்ளார். மேலும், இதனிடையே, செந்தில் பாலாஜியை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தியிருந்தது. இதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது வரை வரை சிறையில் இருந்து வருகிறார்.

இந்த சமயத்தில், ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடலாம் என அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜூன் 16 மற்றும் செப்.20ம் தேதிகளில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டன. செந்தில் பாலாஜி உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது. அதே வேளையில் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கேட்டு அமலாக்கத்துறையும் வாதிட்டது.

இருதரப்பு வாதங்களும் முடிந்து வழங்கிய தீர்ப்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனுக்களை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன்பின், ஒருசில நாட்கள் முன்பு சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த சூழலில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்திருந்த நிலையில், நேற்று ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என ஐகோர்ட் நீதிபதி அறிவித்திருந்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இன்று விசாரணையில் அமலாக்கத்துறை தரப்பில் விசாரணைக்கு அவகாசம் கேட்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

அதேபோல் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்படும். இதனால், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது மறுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை பாதிப்பு காரணமாக, அவருக்கு ஜாமீன் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours