அம்பத்தூர், திருவள்ளூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி தீவிரம்!

Spread the love

அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின்கீழ், அம்பத்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அம்ரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின்கீழ், நாட்டில் உள்ள 1,275 ரயில் நிலையங்களை மேம்படுத்த இந்திய ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம், நீண்ட கால தொலைநோக்குபார்வையுடன் தொடர்ச்சியான அடிப்படையில் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதாகும். ரயில் நிலையத்தின் தேவையை கருத்தில்கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, திருச்சிராப்பள்ளி, சேலம், மதுரை உட்பட6 கோட்டங்களில் 92 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டு, இவற்றில் 8 நிலையங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருவள்ளூர், அம்பத்தூர் ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.21.67 கோடியில் அம்பத்தூர் ரயில் நிலையமும், ரூ.28.82 கோடியில் திருவள்ளூர் ரயில் நிலையமும் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை புறநகர் பகுதியில் உள்ள அம்பத்தூர் ரயில் நிலையம், சிறந்த வணிக, தொழில் துறை மையமாக திகழ்கிறது. மேலும், இது சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே ஒரு முக்கிய ரயில் நிலையமாக இருக்கிறது. இந்த ரயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வரும் விதமாக, புதிய ரயில் நிலையக் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. நடைமேடைகளின் தரை மற்றும் கூரை சீரமைக்கப்படவுள்ளது. இதுதவிர, ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் சீரமைக்கப்படும். ரூ.8கோடி செலவில் இரு மின்தூக்கி வசதியுடன் புதிய 12மீ அகலம்கொண்ட பயணிகள் நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நடைமேடைகளிலும் பயணிகள் நடமாடும் இடங்களிலும் பயனுள்ள தகவல் திரைகள், கண்காணிப்பு கேமரா வசதிபோன்றவை இடம்பெற உள்ளன. இதுபோல, திருவள்ளூர் ரயில் நிலையம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன. தற்போது, இந்த 2 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகள்முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர்கள் கூறினர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours