தமிழகத்துக்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் வந்துள்ள பிரதமர் மோடி, ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் இன்று காலை மலர் தூவி வழிபட்டார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இக்கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இதை முன்னிட்டு நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள புனித தலங்களில் பிரதமர் மோடி தரிசனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்துக்கு மூன்று நாள் சுற்றுப் பயணமாக கடந்த 19ம் தேதி சென்னை வந்த பிரதமர், நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நேற்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பிற்பகலில் அங்கிருந்து ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்தக் கடலில் ருத்ராட்ச மாலை அணிந்து புனித நீராடினார்.
அதைத் தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்று அங்குள்ள 22 தீர்த்தங்களிலும் புனிதநீராடி சுவாமியை வழிபட்டார். பின்னர், இரவு ராமேஸ்வரம் ராமகிருஷ்ணா மடத்தில் தங்கிய பிரதமர், இன்று காலை 9 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு அரிச்சல்முனை கடற்கரைக்கு சாலை மார்க்கமாக காரில் சென்றார்.
+ There are no comments
Add yours