அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட நிர்வாகமே நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Spread the love

தமிழகத்தில் தை முதல் நாளன்று மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து நடத்த வேண்டுமென உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம்தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லுரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

குறிப்பாக அவனியாபுரம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை தென்கால் பாசன விவசாயிகளின் சங்கத்தின் நிர்வாகிகள் கடந்த ஆண்டுகளில் நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த போட்டியினை நடத்தியவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதாக குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் படி மாவட்ட நிர்வாகம், குழுக்களை அழைத்து பேசியும் சமாதானமாகாத நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதன்பின்னர் வருடந்தோறும் தை மாதம் 15ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகமே நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டு 2024ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நாங்கள் தான் நடத்துவோம் என்று பல தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர். அவனியாபுரத்தில் இருக்கும் பல்வேறு பிரிவினர்களுக்குள் பிரச்சினை மற்றும் அசம்பாவிதங்கள், வாக்கு வாதங்கள் ஏற்படுகிறது.

இதனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மீது வெறுப்பு உண்டாகும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தனிக்குழுக்களோ, தனிப்பட்ட அமைப்புகளோ ஜல்லிக்கட்டை நடத்த நேரிட்டால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை மற்றும் சாதி ரீதியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகையால் அவனியாபுரம் கிராமத்தில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டை, மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எந்தவிதமான சாதி, மத சாயல்கள் இல்லாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும். மேலும் இந்தாண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours