ஆகஸ்டில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு !

Spread the love

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசிக்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களின் போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ளது.

முத்தமிழ் முருகன் மாநாடு

இந்த நிலையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25 ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் கட்டுரை

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பழனியில் ஆகஸ்ட் 24, 25 ம் தேதிகளில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனியாக வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

மாநாட்டின் சிறப்புகள்

மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ் பெற்ற முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்கு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் என முருகப்பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு அமைக்கப்படுவதோடு, சமய பெரியோர்களின் உரைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

இம்மாநாட்டில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகவும், பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்களும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுகள்

இம்மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.

இணையதளம்

மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் தங்கள் வருகையை பதிவு செய்வதற்கும், முருகப்பெருமானை கருப்பொருளாகக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடைசி

மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் வருகின்ற 15.07.2024 ஆம் தேதிக்குள்ளும் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் 20.06.2024 ஆம் தேதிக்குள்ளும் மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவு செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours