சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது என்று போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார்.
சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கடந்தாண்டு டிச.30ம் தேதி திறக்கப்பட்டது. வசதி குறைபாடுகள் உள்ளதாக காரணம் கூறி, அங்கிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என்று பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றங்களை நாடினர்.
தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுகுறித்து, போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும், போரூர், சூரப்பட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது. இதை உச்சநீதிமன்ற தீர்ப்பும் உறுதி செய்துள்ளது. இதை மீறினால், ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும்.
மேலும், இந்த மூன்று இடங்களை தவிர வேறு இடங்களை தங்களது பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருளிலும், Red Bus, Abhi Bus உள்ளிட்ட செயலிகளிலும் பொதுமக்களை குழப்பும் வகையில் பதிவிடக்கூடாது. இதை மீறினாலும் ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
+ There are no comments
Add yours