ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே டிலைட் பாலை முன்னிலைப்படுத்துகிறோம்: அமைச்சர் மனோ தங்கராஜ்!

Spread the love

பசும்பாலின் தரத்தை மாற்றாமல், ஆரோக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஊதா நிற டிலைட் பாலை முன்னிலைபடுத்துவதாக பால்வளத் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனத்தில் 4 வகையான பால் விற்பனையில் உள்ளது. நமது நாட்டின் பசு மாடுகளின் பாலில் சராசரியாக 3.3 சதவீதம் முதல் 4.3 சதவீதம் கொழுப்பு சத்தும், 8.0 சதவீதம் முதல் 8.5 சதவீதம் இதர சத்துக்கள் அடங்கி இருக்கும்.

வாடிக்கையாளர்களுக்கு தரமான பசும்பாலின் தரத்தில் வழங்கும் நோக்கத்தோடு 3.5 சதவீதம் கொழுப்பு மற்றும் 8.5 சதவீதம் இதர சத்துக்கள் அடங்கிய பாலுடன் வைட்டமின் ஏ மற்றும் டி தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு செறிவூட்டி, ஊதா நிற பாக்கெட்டுகளில் ஆவின் டிலைட் என்ற பெயரில் லிட்டர் ஒன்று ரூ.44-க்கு வழங்குகிறோம்.

சந்தை மதிப்பை ஒப்பிட்டால், பல நிறுவனங்கள் இந்தபாலை விற்கும் விலையை விட இது மிக மிக குறைந்த விலையாகும். இந்த பால் பசும்பாலின் முழுமையான தரத்தில் வழங்கப்படுவதால், கொழுப்பு கூடுதலாக சேர்த்த பச்சை நிற பாலைவிட சராசரி மனிதனின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது. எனவே, இந்த வகை பாலை முன்னிலைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆவின் நீண்ட காலமாக வழங்கும் பச்சை நிற நிலைப்படுத்தப்பட்ட பாலை பொருத்தவரை, பசும்பாலில் கூடுதலாக ஒரு சதவீதம் கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்கப்படுகிறது. இந்த கொழுப்பு இன்றைய வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்ப அறிவியல்பூர்வமாக பார்த்தால் தேவையற்ற ஒன்றாகும். அதிலும், பல வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்ட திடப்பொருள்கள் சேர்ப்பதை விரும்பவில்லை.

எனவே, ஆரோக்கியத்துக்கான ஆவின் என்ற அடிப்படையில் அதன் விற்பனையை மேலும் ஊக்குவிக்காமல் அதற்கு பதிலாக ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துகிறோம்.

இந்த நடவடிக்கைகள் எதுவும் லாப நோக்கிலோ அல்லது வியாபார உத்தியாகவோ கையாளப்படவில்லை. இன்றைய சூழலில் பசும்பாலின் தரம் எந்த விதத்திலும் மாற்றத்துக்கு உட்படுத்தப்படாமல், வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கிறோம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours