கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி பிற்பகலில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முதல் நுழைவுவாயில் முன்பு கருக்கா வினோத் எனும் ரவுடி பெட்ரோல் பாட்டில் உடன் வந்து அதனை பற்றவைத்து கேட் அருகே உள்ள தடுப்பு (பேரிகாட்) மீது வீசினார். அவர் அடுத்த பாட்டில் பற்ற வைப்பதற்குள் சென்னை மாநகர் காவல்துறையினர் கருக்கா வினோத்தை தடுத்து கைது செய்தனர்.
சம்பவ இடத்திலேயே சென்னை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது வெடிபொருள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கருக்கா வினோத் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தால் கடந்த நவம்பர் 11ஆம் தேதி அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
ஆளுநர் மாளிகை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்றனர் உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளை ஆளுநர் மாளிகை கூறிய நிலையில், பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோக்களை வெளியிட்டு தமிழக காவல்துறை விளக்கம் அளித்தது. கருக்கா வினோத் தனியாக சைதாபேட்டையில் இருந்து நடந்து வந்து ஆளுநர் மாளிகை அருகே பேரிகாட் மீது பெட்ரோல் பாட்டில் பற்றவைத்து வீசியதும், உடனே சென்னை காவல்துறையினர் கைது செய்ததும் குறித்து விளக்கம் அளித்தனர்.
பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவம் நடத்திய சில தினங்களுக்கு முன்னர் தான் கருக்கா வினோத் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கருத்தில் கொண்டு விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். சிறையில் இருக்கும் போது பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் இன்று சம்பவ இடத்துக்கு, தடவியல் நிபுணர்களுடன் நேரில் வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவத்தன்று அங்கிருந்த காவல்துறையினரிடம் NIA அதிகாரிகள் , சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றி விளக்கம் கேட்டறிந்தனர். தற்போது NIA விசாரணை என்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours