ஆவணங்களை இன்று பிற்பகலுக்குள் தாக்கல் செய்ய உத்தரவு!

Spread the love

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தது தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக கடந்த மே 4 அன்று, யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை போலீஸார் தேனியில் வைத்து கைது செய்தனர். கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக்கூறி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12 அன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் எனக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘போலீஸார் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எனது மகன் மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளை சட்டவிரோதமாக பதிவு செய்து ஒவ்வொரு நீதிமன்றமாக ஆஜர்படுத்தி வருகின்றனர். காவல்துறையால் தாக்கப்பட்டதால் கை மற்றும் பல்வேறு இடங்களில் காயம்பட்டுள்ள எனது மகனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை. போலீஸாரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனது மகன் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எனது மகன் ஒருபோதும் செயல்படவில்லை. சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் எனது மகனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது. பழிவாங்கும் நோக்குடன் உள்நோக்கம் கொண்டது என்பதால் அதை ரத்து செய்து எனது மகனை விடுவிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours