இனி என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியவில்லை… விஜயகாந்தின் சகோதரர் வேதனை!

Spread the love

“எங்களது சகோதர, சகோதரிகளின் குடும்பத்தினரை எப்போதும் விஜயகாந்த் அரவணைத்துச் செல்வார். இனிமேல் என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியவில்லை” என்று அவரது சகோதரர் கண்ணீர் மல்க கூறினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகில் ராமானுஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி – ஆண்டாள் தம்பதி. அழகர்சாமி மதுரைக்கு வந்து கீரைத்துறை பகுதியில் ரைஸ் மில் தொழில் ஆரம்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மதுரை மேலமாசி வீதியிலுள்ள சவுராஷ்டிரா சந்து பகுதியில் குடியேறியுள்ளார். அழகர்சாமி – ஆண்டாள் தம்பதிக்கு விஜயலட்சுமி, நாகராஜ் (இறந்துவிட்டார்) விஜயராஜ் (எ) கேப்டன் விஜயகாந்த், திருமலா தேவி ஆகியோரும், ஆண்டாள் இறந்த பிறகு அழகர்சாமி அவரது அக்காள் மகளான ருக்மணியை 2வது திருமணம் செய்துள்ளார். இவருக்கு செல்வராஜ், பால்ராஜ், சித்ராதேவி, ராமராஜ் (இறந்துவிட்டார்) மீனாகுமாரி, சாந்தி, பிருதிவிராஜ் ஆகியோரும் உள்ளனர்.

இதில் மேலமாசி வீதியிலுள்ள பூர்வீக வீட்டில் விஜயகாந்தின் சகோதரர் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விஜயகாந்துடன் பிறந்த சகோதரர்கள் மதுரை, சென்னை, தேனி போன்ற ஊர்களில் வசிக்கின்றனர். விஜயகாந்த் மரணம் குறித்து அவரது சகோதரர் செல்வராஜ் கூறுகையில், “சென்னைக்கு சென்று, சிரமப்பட்டு சினிமா துறைக்கு சென்று முன்னேறினார். எங்களை நன்றாக கவனித்தார். ஒவ்வொரு ஆண்டும் எங்களது அப்பா இறந்த தினத்திற்கு மதுரை பூர்விக வீ்ட்டுக்கு வருவார். ஓரிரு ஆண்டாகவே வரவில்லை.

தேர்தல் போட்டியிடும்போது, முதலில் இங்கு வந்து எங்களது பெற்றோரை வணங்கிவிட்டுச் சென்றார். 4 மாதத்திற்கு முன்பு எனது மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்னைக்கு சென்றபோது, நேரில் பார்த்தேன். உறவினர் தவிர, யார் உதவி கேட்டாலும் ஓடிப் போய் செய்வார்.

எங்களது சகோதர, சகோதரிகளின் குடும்பத்தினரை எப்போதும் அரவணைத்துச் செல்வார். இனிமேல் என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியவில்லை. அண்ணியார், அவரது மகன்கள் சொல்வதை கேட்போம். அவரது இழப்பு எங்களது குடும்பத்தினரை மட்டுமின்றி அவரது கட்சியினர், ரசிகர்களுக்கும் பேரிழப்பு” என கண்ணீருடன் கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours