2022 ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பலமுறை முயன்றும் ஓபிஎஸ் தரப்பால் எந்த சாதகமான பலனையும் பெற முடியவில்லை.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளாக ஓபிஎஸ்ஸுக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சறுக்கல் என்றாலும் தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது, அவ்வப்போது சிறு சிறு கூட்டங்களை நடத்துவது என்று விடாமல் சண்டை செய்து வருகிறார் என்றால் அதற்கு வைத்திலிங்கம் முக்கிய காரணம்.
ஓபிஎஸ்ஸின் ஆதரவு வட்டம் பெரியளவில் குறைந்து வந்த போதும் திருச்சியில் மாநாடு நடத்தி கூட்டத்தை சேர்த்து மாஸ் காட்டினார் வைத்திலிங்கம். அதிமுகவிலிருந்து மறைமுக அழைப்புகள் வந்தும் ஓபிஎஸ் உடன் பயணித்து வரும் வைத்திலிங்கம் போன்றவர்களால் தான் ஓபிஎஸ்ஸால் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அரசியல் செய்ய முடிகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு அமமுகவுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது. தேர்தல் நெருக்கத்தில் இவர்கள் பாஜகவுடன் கைகோர்க்க வாய்ப்பு உள்ளது.
பாஜக – அதிமுக கூட்டணி முறிவுக்குப் பின்னர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தமாகா ஜிகே வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் எந்த பக்கம் செல்ல உள்ளனர் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்காமல் உள்ளனர்.
இந்நிலையில் அதிமுக தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட் கூட பெறாது என்று ஆர்.வைத்திலிங்கம் கூறியுள்ளார். தஞ்சையில் நேற்றிரவு நடைபெற்ற அ.தி.மு.க உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், “மோடியுடன் கூட்டணி இல்லை என்று கூறுகிற எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா சொன்னது போல் சொல்வாரா? லேடியா மோடியா பார்த்துவிடலாம் என்றாரே, அது போல் எடப்பாடியா மோடியா என்று இவர் கூறுவாரா?
எடப்பாடி பழனிசாமி பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு செயல்பட்டார். அவர் தன்னை சூப்பர் புரட்சி தலைவர், சூப்பர் புரட்சி தலைவி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் முதல்வராக இருந்த இருந்த போது 5 ஆண்டுகளிலும் அவரை ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது. கட்சிக்காரர்களை சந்திக்கவே இல்லை.
அதிமுகவை இணைப்பதற்கு எடப்பாடியை தவிர எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று என்று நினைத்து யாராவது தேர்தல் ஆணையத்தை அனுகினால் இரட்டை இலை முடங்கிவிடும். எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிட்டால் சேலத்தில் சேலத்தில் கூட டெபாசிட் பெற முடியாது. எடப்பாடி இல்லாமல் கட்சியை இணைப்போம். வரும் 29ஆம் தேதி தஞ்சையில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கும் உரிமை மீட்புக் கூட்டம் நடைபெற உள்ளது” என்று கூறினார்.
+ There are no comments
Add yours