சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே. என். நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
திமுக இளைஞர் அணி மாநில மாநாடு அடுத்த மாதம் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்காக திமுக தரப்பில் விரிவான வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திட ஆலோசிப்பதற்காக திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னையில் தனியார் ஹோட்டலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக இளைஞரணி மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இதனை அறிவித்தார். பொதுவாக திமுக மாநாடு என்றாலே மிகவும் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் நடைபெறுவது வழக்கம். அதிலும் அந்த பொறுப்பு அமைச்சர் நேருவிடம் கொடுக்கப்பட்டால் அதனை மிகச் சிறப்பாக நடத்தி முடிப்பார் என்பது கருணாநிதி காலத்தில் இருந்து தொடர்கிற வழக்கம்.
அதன்படியே ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் திமுகவின் மாநில மாநாட்டை திருச்சியில் மிகப் பிரம்மாண்டமாக நேரு நடத்தி முடித்தார். அதன் காரணமாக தற்போது இளைஞர் அணி மாநாடு சேலத்தில் நடைபெற உள்ள நிலையில், அதன் ஒருங்கிணைப்பாளராக நேருவையே திமுக தலைமை நியமித்திருக்கிறது.
இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் அனைவரும் ஏற்பாடுகளை துரிதமாக செய்ய வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொண்டார். அத்துடன் எந்தத் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்களையே தேர்ந்தெடுத்து நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள். இவர்தான் இந்த தொகுதிக்கு என்று எதுவும் இல்லை. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவற்றை தலைமை பார்த்துக் கொள்ளும், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று பேசினார்.
+ There are no comments
Add yours