தனது மற்றும் தனது மனைவி உள்ளிட்டவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்புக் குற்றச்சாட்டைக் கிளப்பி இருக்கிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் பாஜகவுக்கும் ஆளும் திமுகவுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்களும் வார்த்தைப் போர்களும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங், நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் திமுகவை கடுமையாக குற்றம் சாட்டிப் பேசினர்.
பதிலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்பி உள்ளிட்டவர்கள் பாஜகவை கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். இந்த நிலையில். தனது செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ” எனது செல்போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது. ஒட்டுக் கேட்கப்பட்டு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தெரிவிக்கப்படுகிறது.
சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கும் இத்தகவல் தெரிவிக்கப்படுகிறது. என்னுடையது மட்டுமல்லாமல் எனது மனைவி, சகோதரி மற்றும் நண்பர்களுடைய செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்படுகிறது. தமிழக உளவுத்துறை ஐஜி இதை செய்கிறார். தேர்தல் முடிந்தபிறகு உளவுத்துறை அதிகாரிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
அண்மைக்காலமாக பாஜக குறித்த தகவல்கள் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினருக்கு உடனுக்குடன் தெரிந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் தான் நயினார் நாகேந்திரனின் விடுதி மேலாளர் கொண்டு சென்ற நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற தொகுதிகளிலும் தேர்தல் செலவுக்காக பணம் வைத்திருப்பதாக கூறப்படும் நபர்களின் இல்லங்கள் மற்றும் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்கிறார்கள்.
இதெல்லாம் பாஜக வட்டாரத்தில் இருந்தே திமுக அரசுக்கு தெரிய வருவதாக அண்ணாமலை கருதுகிறார். அதன் விளைவாகவே அவருடைய மற்றும் அவரது மனைவி, சகோதரி உள்ளிட்டவர் களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக திமுக அரசின் காவல்துறை மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours