மத்தியில் மோடி அவர்கள், மாநிலத்தில் எடப்பாடி என்று எப்படி நான் சொல்ல முடியும்? எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக என்னால் அறிவிக்க முடியாது. அதை தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் அதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர்களுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு வரும் நிலையில் அந்த பிரச்னை தற்போது விஷரூபம் எடுத்துள்ளது . இந்நிலையில் திடிரென நேற்று முன்தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது அண்ணாமலை இதுகுறித்த வாதத்தை முன்வைத்துள்ளார் .
தமிழகத்தின் மான்செஸ்டர் நகரமான கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது :
அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் பிரச்சனை இருக்கிறதா என்றால் இல்லை, அதிமுகவுக்கும், தமிழக பாஜகவுக்கும் பிரச்சனை இருக்கிறதா என்றால் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும், அண்ணாமலைக்கும் பிரச்சனை இருக்கிறதா என்றால், இருக்கலாம்.
மத்தியில் மோடி அவர்கள், மாநிலத்தில் எடப்பாடி என்று எப்படி நான் சொல்ல முடியும்? எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக என்னால் அறிவிக்க முடியாது. அதை தேசிய தலைமை தான் முடிவு செய்யும். முன்னாள் அமைச்சர் செலுர்ராஜூ கூறியதை என்னால் நிறைவேற்றமுடியாது.
தமிழகத்தில் பாஜகவை வளர்க்க, பாஜக ஆட்சியை கொண்டுவர தான் நான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். நான் யாரையும் தவறாக பேசவில்லை. எனக்கு யாரிடமும் பிரச்சனை இல்லை.
அறிஞர் அண்ணாவை பற்றி பல இடங்களில் நல்லமுறையாக பேசியுள்ளேன். அறிஞர் அண்ணாவை பற்றி எந்த இடத்திலும் எங்கும் நான் தவறாக பேசவில்லை .
பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று என்னை தேசிய தலைமை சொல்லச் சொன்னால் நான் நிச்சயம் சொல்வேன். எனக்கு ஆக்ரோஷமாக தான் அரசியல் செய்ய தெரியும். அதை தான் நான் செய்கிறேன் என அண்ணாமலை ஓப்பனாக பேசியுள்ளார்.
+ There are no comments
Add yours