திருநெல்வேலி: “என்னிடம் தேர்தலுக்காக 11 லட்சம் ரூபாயை ஜெயக்குமார் தந்ததாகவும், அதனை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளுமாறு நான் கூறியதாகவும் ஜெயக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது முற்றிலும் பொய்யான ஒரு தகவல்” என்று ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணைக்கு ஆஜரான பிறகு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து 8 தனிப்படைகளை அமைத்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன்கள், உறவினர் டாக்டர் செல்வகுமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் 15 தினங்களுக்குள் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவிடம் நெல்லையில் உள்ள தனியார் விடுதியில் தனிப்படை ஆய்வாளர் கண்ணன் சுமார் அரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின்போது, தங்கபாலு தனது பதிலை எழுத்து மூலமாகவும் விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “என்னிடம் தேர்தலுக்காக 11 லட்சம் ரூபாய் ஜெயக்குமார் தந்ததாகவும், அதனை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளுமாறு நான் கூறியதாகவும் ஜெயக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது முற்றிலும் பொய்யான ஒரு தகவல். இதனை நான் விசாரணையின்போது தெளிவாக கூறினேன். காவல் துறை விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது” என்று அவர் கூறினார்.
+ There are no comments
Add yours