வருங்காலத்தில் ஒபிஎஸ்-உடன் இணைந்து செயல்பட உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக சார்பில் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் தெருமுனை பிரச்சார கூட்டங்களையும், ஏழை-எளியோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாகக் கடலூருக்குச் சென்றுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மஞ்சக்குப்பம், மணிக்கூண்டு அருகே அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வமும், நானும் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவை எடுத்துள்ளோம். அதன்படியே செயல்பட்டு வருகிறோம் என்றார். நாடாளுமன்ற கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார். பாஜவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராக எந்த கட்சி செயல்பட்டாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என உறுதியாகத் தெரிவித்து இருந்தேன்.
விவசாயிகளை, தமிழ்நாட்டு மக்களைப் பாதிக்கும் திட்டங்களையும், ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றையும் தமிழ்நாட்டில் மத்திய அரசு திணிக்க முயன்றது. அந்த நிலைப்பாட்டிலிருந்து மத்திய அரசு தற்போது மாறியிருப்பதால், கடுமையான எதிர்வினை ஆற்றவில்லை எனக் கூறினார். வெள்ள நிவாரண நிதி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், வெள்ள நிவாரண நிதியைத் தமிழக அரசு கேட்டுள்ளது. அதனை மத்திய அரசு தர வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கையும் என்றார். திருவள்ளுவர் காவி உடை விவகாரத்தில் ஆளுநரின் செயல் அவரது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதுபோன்ற செயல்களை ஆளுநர் செய்வது தவறு, அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் கோரிக்கை என்றார்.
+ There are no comments
Add yours