கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடத்தப்படும்!

Spread the love

மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தவர்களில் கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினார்.

இதுதொடர்பாக, அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், “காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 26.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் குறைந்தபட்சமாக 20.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் ஒரு வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை என்று புகார் அளித்தனர். அது உடனடியாக சரிசெய்யப்பட்டது என்றார்.

அப்போது அவரிடம், சேலத்தில் வாக்களிக்க வந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சேலம் சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம். வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பந்தல், வாக்காளர்கள் அமர்ந்து செல்வதற்கான இருக்கைக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, வாக்காளர்கள் தங்களது உடல்நலனை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேநேரம், வாக்களிப்பதற்கு இன்னும் நேரம் இருக்கிறது” என்றார்.

மேலும், “விளவங்கோடு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, காலை 11 மணி நிலவரப்படி 17.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறாக இருந்து மேலும், காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியிருந்தால் அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்.

அதேநேரம், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தவர்களில் கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours