தொடர் மழை காரணமாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 2 ரயில்கள் விருதுநகரில் இன்று நிறுத்தப்பட்டன. இதனால், குழந்தைகள், முதியவர்களுடன் பயணிகள் தவித்தனர். தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று தொடங்கி இன்று அதிகாலை வரை தொடர் மழை பெய்ததால் ரயில் நிலையங்கள் மழைநீரால் சூழப்பட்டன. இதனால், பாதுகாப்பு கருதி சென்னையிலிருந்து திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட இரு ரயில்கள் இன்று அதிகாலை விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. மேலும், இந்த 2 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டன.
இதனால், இந்த இரு ரயில்களில் வந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் விருதுநகரிலேயே இறக்கிவிடப்பட்டனர். அதிகாலையில் திடீரென இறக்கிவிடப்பட்டதால் குழந்தைகள், முதியவர்களுடன் வந்த பயணிகள் தவித்தனர். உடனடியாக அவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அரசு பேருந்துகள் மூலம் விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் வெளியூர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கங்கைகொண்டான்- தாழையூத்து இடையே ரயில் தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாகியதாலும், பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளதாலும் சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி- திருவனந்தபுரம் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி- ஈரோடு ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தன. இதுபோல் திருநெல்வேலி- தூத்துக்குடி, திருநெல்வேலி- திருச்செந்தூர், திருநெல்வேலி- செங்கோட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. சென்னையிலிருந்து திருநெல்வேலி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டது.
+ There are no comments
Add yours