கனமழை காரணமாக நீலகிரி மலை ரயில் இரண்டு நாட்கள் ரத்து!

Spread the love

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு திசைக்காற்று மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் கோவையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மிதமான மழை பெய்தது.

அதே சமயம் நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை கனமழை பெய்தது. இதனால் காலை முதல் கடும் பனிமூட்டத்துடன் மிதமான மழைபெய்து வந்தததால் குளிர் அதிகரித்து காணப்பட்டது.

இதனிடையே நாளை 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நீலகிரியில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் இன்று மேட்டுப்பாளையம்-குன்னூர்-உதகை இடையேயான மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே மழைத் தொடர்ந்து வருவதால், கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாலும், டிச. 9,10 ஆகிய இரு நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

மழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு, பாறைகள் விழுவது போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால் அதனைச் சீரமைக்க ரயில்வே ஊழியர்கள் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் மலைப்பாதைகளில் தொடர்ந்து பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதற்கும் வாய்ப்புள்ளதால் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்குமாறு வனத்துறையும் அறிவுறுத்தியுள்ளது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours