கருணாநிதியின் மருமகளைக் கைது செய்ய வேண்டும்… சீமான் !

Spread the love

வறுமை காரணமாக வீட்டு வேலைக்கு வந்த இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள காரசாரா செய்தியில் கூறிருப்பதாவது :

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமைபோல நடத்தி, கொடும் சித்திரவதைக்குள்ளாகியதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதனை கேட்டவுடன் என் மனம் அதிர்ச்சியில் சில நொடிகள் வேகமாக துடித்தது. தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீர்மல்கக் கூறும் அப்பெண்ணின் காணொளியைப் பார்க்கிறபோது நெஞ்சம் பதைபதைக்கிறது.

அப்பெண்ணுக்கு நடந்தேறியது சொல்லவியலா மனிதவதை! குரூரத்தின் உச்சம்! என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

எளிய குடும்பப் பின்னணியில் பிறந்ததால், வறுமையையும், ஏழ்மையையும் போக்க வீட்டு வேலைக்குச் சென்ற அப்பெண்ணுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை .

இரவு பகலென்றும் பாராது ஓய்வில்லாதவகையில் கடுமையான வேலைகளைக் கொடுத்து உழைப்பைச் சுரண்டியதோடு மட்டுமல்லாது, நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
அந்த இளம் பெண்ணை தினந்தோறும் துன்புறுத்தி வந்த அக்குடும்பத்தினரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரது குடும்பமெனும் அதிகாரத்திமிரே மனிதத்தன்மையற்ற இக்கொடூரங்களை அப்பெண்ணின் மீது பாய்ச்சுவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

எளிய மனிதர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இக்கோரத்தாக்குதல்களும், வன்முறைவெறியாட்டங்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய கொடுங்குற்றங்களாகும்.

ஆகவே, தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, இளம் பெண்ணைக் கொடூரமாகத் தக்ககிய சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .

துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

ஆட்சியிலோ அதிகாரத்திலோ இருக்கும் எந்த ஒரு நபரும் அவர் சார்ந்த குடும்பத்தினரும் யார் மீதும் வன்மத்தையும் வன்முறையையும் காட்டக்கூடாது.

இனியும் இதுபோன்ற கோர சம்பவங்கள் தமிழ்நாடில் நடைபெறாமல் இருக்க தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours