கார்த்திகை தீபத்தை ஒட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கார்த்திகை தீபத்திருநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட பொதுமக்கள் ஆயத்தம் காட்டி வருகின்றனர். இதற்காக கார்த்திகை விளக்குகள், எண்ணெய், திரி மற்றும் பூஜைக்கான பூக்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கார்த்திகை தீபத்தை ஒட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகளும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ.1,800க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ இன்று ரூ.2,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.50க்கு விற்பனையான செவ்வந்தி பூ இன்று ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. செவ்வந்தி பூக்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளபோதும், விலை அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதே போல் முல்லைப் பூ ரூ.800க்கும், பிச்சிப்பூ ரூ.900க்கும், சம்பங்கி ரூ.100க்கும், மெட்ராஸ் மல்லி ரூ.800க்கும், அரளி ரூ.400க்கும், பட்டன் ரோஸ் ரூ.150க்கும், பன்னீர் ரோஸ் ரூ.250க்கும் செண்டு மல்லி ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மலர் அங்காடிக்கு சிலைமான், அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours