திருவள்ளுவர் திருநாள் விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் மாளிகை செய்துள்ளது.
முன்னதாக, இந்த விழாவுக்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் இடம் பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இதையடுத்து ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரோந்து போலீஸார் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். உளவுத் துறையினரும் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் ஆளுநர் மாளிகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகிறார்.
முன்னதாக, திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை வழிபாடு செய்தார்.
உலகப்பொதுமறை தந்து, தமிழுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் சென்னை மயிலாப்பூரில் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் அன்றைய தினம் தமிழர்களில் ஒரு தரப்பினரால் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாப்பூரில் 400 ஆண்டுகளுக்கு மேலாக திருவள்ளுவர் கோயிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது.
இந்த ஆண்டு வைகாசி அனுஷம் தினம் மற்றும் திருவள்ளுவர் திருநாள் இன்று (மே 24) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அவரை கோயில் செயல் அலுவலர் தமிழ்செல்வி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, வள்ளுவர் சிலைக்கு தீப ஆராதனை செய்யப்பட்டது.
+ There are no comments
Add yours