பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி ஏகனாபுரம் கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்துள்ளதால் அங்கு இதுவரை பொதுமக்களின் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து சுமார் 5,000 ஏக்கர் விளைநிலங்கள், மனைகள், நீர் நிலைகள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்களும் மற்றும் ஏகனாபுரத்தைச் சேர்ந்த மக்களும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளன. ஆனால் இவர்களின் போராட்டங்களை கண்டுகொள்ளாத அரசு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது.
மற்ற கிராமங்களில் பகுதி அளவே நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் போராட்டம் ஒருமித்த போராட்டமாக இல்லாததால் அந்த கிராமங்களில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் ஏகனாபுரம் கிராமம் முழுவதுமாக கையகப்படுத்தப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராமத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டக் குழுவினர் என அனைவரும் ஒன்றிணைந்து ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மக்களவைத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பது என்று முடிவு செய்தனர்.
ஆனாலும் தேர்தல் ஆணையம் சார்பில் ஏகனாபுரத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கு தயாராக உள்ள நிலையில் அங்கு காலை பத்து முப்பது மணி வரை ஊர் மக்கள் ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. இதனால் அதிகாரிகள் வெறுமனே அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours