மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதனக் கடன், கடன் திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டித்தல் உள்ளிட்ட, முக்கிய உதவிகளை வழங்கிட மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திகுறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடனுதவி வழங்கிடவும், காப்பீட்டு தொகையை விரைந்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று (9.12.2023) கடிதம் எழுதியுள்ளார்கள்.
அண்மையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்து உற்பத்தியிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டங்களில் 24 தொழிற்பேட்டைகளில் உள்ள சுமார் 4800 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இடைவிடாத பெரு மழையினால் அதிகமான பாதிப்பிற்குள்ளானது மட்டுமல்லாமல் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் சேதம் அடைந்து தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட இயலாத நிலையில் உள்ளது.
இந்த நிறுவனங்கள் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, ஏற்றுமதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்நிறுவனங்களை உடனடியாக மீட்டெடுப்பது அவசியமென்பதினை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசு மின் விநியோகம் மற்றும் சாலை போக்குவரத்தை உடனடியாக சீர் செய்துள்ளபோதும், இந்நிறுவனங்கள் மீண்டும் முழுமையாக உற்பத்தியை துவங்க சிறிது காலம் தேவைப்படும் என்பதால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் திருப்பி செலுத்தும் காலத்தை மாற்றியமைத்திடவும், கூடுதல் மிகைப்பற்று (Over Draft) வசதியினை வழங்கிடவும், கூடுதல் நடைமுறை மூலதன கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை அறிவுறுத்தவும், காப்பீட்டு தொகையை காலதாமதமின்றி மதிப்பீடு செய்து உடனடியாக விடுவிக்க விரைந்து நடிவடிக்கை எடுக்க காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்திடவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழ உறுதுணையாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours