ஒரு தொகுதிக்கு சம்மதம் என்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக கூறியுள்ளதால், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி குழப்பத்தில் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெறும் என்றும், அந்த கட்சிக்கு கோவை தொகுதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்ட நிலையில், இந்த கட்சிகளுக்கு இடையே இன்னும் முதல் கட்ட பேச்சு வார்த்தை கூட நடைபெறவில்லை. ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவீதங்களை காட்டி, 2 தொகுதிகள் வேண்டும் என மநீம கேட்கிறது. ஆனால் 1 சீட் மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவை தொகுதி வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்கும் நிலையில் அதை தற்போது கையில் வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து பெறுவதில் திமுகவுக்கு சங்கடம் உள்ளது.
எனவே வேறு தொகுதியை வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் திமுக கூறுகிறது. இப்படி தாங்கள் கேட்ட இரண்டுக்கும் திமுக ஒத்து வராததால் மநீம குழப்பத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் கொடுக்கும் ஒரு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் திமுக உறுதியாக கூறி விட்டதாம். அதற்கும் கமல்ஹாசன் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு கட்சியின் தலைவரே இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால் மக்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று கமல் கருதுகிறாராம்.
எனவே இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு மாநிலங்களவை தொகுதியை மட்டும் தருமாறு கேட்டு வாங்கி நாடாளுமன்றம் செல்லலாமா என்று கமல்ஹாசன் யோசிப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் நாளை காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சு வார்த்தைக்கு வருமாறு திமுக அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு தொகுதி தான், அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும், இதற்கு சம்மதம் என்றால் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், இல்லையேல் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் எனவும் திமுக சொல்லியிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
+ There are no comments
Add yours