ராம நவமியை முன்னிட்டு நாளை தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு வரும் கேரள யாத்திரை குழு அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 12 முதல் 17-ம் தேதி வரை கேரள மாநிலம் மலப்புரம் வண்டூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை யாத்திரை செல்ல அனுமதி கோரி கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், ’தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக சென்று கன்னியாகுமரியில் நிறைவடையும் யாத்திரைக்கு முறைப்படி அனுமதி கோரினோம். ஆனால், சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார் திலீப் நம்பியார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன முன்னிலையில் கடந்த முறை வந்த போது, அரசு சார்பில், யாத்திரைக்கு அரசு எதிராக இல்லை எனவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே தற்போது அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கன்னியாக்குமரியில் யாத்திரை செல்ல அனுமதி கோரி மனுதாரர் விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டிருந்தார் நீதிபதி.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திருச்செந்தூர் வழியாக செல்ல அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதற்கு அனுமதி மறுத்த நீதிபதி, ”மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் படி யாத்திரை குழு செயல்பட வேண்டும். கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்திற்கு ராமர் படத்துடன் 3 வாகனங்களும் 30 பேரும் மட்டும் செல்ல வேண்டும். ஏப்ரல் 17-ம் தேதி மதியம் 2 மணி அளவில் யாத்திரையை முடித்து கேரளாவிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். இதில் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
+ There are no comments
Add yours