ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல் முறையாக நீலகிரி மாவட்டத்திலுள்ள கொடநாடு எஸ்டேட் பங்களாவிற்கு இன்று வருகை தந்தார். அவருக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு ஜெயலலிதாவும் சசிகலாவும் ஓய்வெடுக்க கொடநாடு சென்றனர். அதன்பிறகு சுமார் 7 ஆண்டுகள் கழித்து இப்போது சசிகலா சென்றுள்ளார்.
கொடநாடு பங்களாவில் இன்று இரவு தங்கும் சசிகலா, நாளை காலை ஜெயலலிதா சிலை அமைப்பதற்காக நடைபெறும் பூமி பூஜை விழாவில் கலந்துகொள்கிறார். இந்த நிலையில் கொடநாட்டில் காரில் இருந்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது சசிகலா, “கொடநாடு எஸ்டேட்டில் வேலை செய்பவர்களை சந்திக்க வந்தேன். எப்போதும் அம்மாவுடன் தான் கொடநாடு வந்துள்ளேன்.. முதல் முறையாக இன்றைக்கு அம்மா இல்லாமல் வந்துள்ள நிலையில், அவரது நினைவுகளாகவே உள்ளது. இதுபோன்ற ஒரு சூழல் வரும் என நான் நினைக்கக் கூட இல்லை” என்று சசிகலா கூறக் கூற அவர் கண்களில் கண்ணீர் கொட்டியது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான கேள்விக்கு, “கொடநாட்டில் சிறு வயது முதலே காவலாளியாக இருந்த ஒரு நல்ல மனிதர் உயிரிழந்துவிட்டார். அம்மா தெய்வமாக இருந்து உண்மையான குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வாங்கித் தருவார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று பதிலளித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி பேசிய சசிகலா, “அதிமுக ஒன்றிணைய நடவடிக்கை எடுத்தே வருகிறேன். நிச்சயம் அது நல்லபடியாக அமையும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போக வேண்டும். அதுதான் அரசியலில் நல்லது என நான் நினைக்கிறேன். அதுபோன்ற சூழல் வரும்போது அதிமுக ஒன்றிணைவது நிச்சயம் நடக்கும்” என்று கூறிவிட்டுச் சென்றார். மேலும் ஜெயலலிதாவுக்காகவே தான் இங்கு வந்ததாகவும், அவருக்காக ஒரு பூஜையை செய்ய உள்ளதாகவும் சசிகலா குறிப்பிட்டார்.
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என சசிகலா குறிப்பிட்டது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியைத் தான் என்று கூறுகிறார்கள் சசிகலா தரப்பில். ஆனாலும் நீண்ட நாட்களாக சசிகலா பேட்டியளிக்கும் போது மட்டும் அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி பேசுவதாகவும் பின்னணியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
+ There are no comments
Add yours