கோவை கருமத்தம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை வரவேற்று பதாகைகள் வைக்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸாருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாடு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி பங்கேற்றார். இதையொட்டி, கிறிஸ்தவ கூட்டமைப்பு மற்றும் அதிமுகசார்பில் பழனிசாமியை வரவேற்று கருமத்தம்பட்டியில் பல்வேறு இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், அதிமுக சார்பில் வரவேற்பு பதாகைகள் வைக்க எதிர்ப்புத் தெரிவித்து, அவற்றை கருமத்தம்பட்டி போலீஸார் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிமுகவினர் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு திரண்டு, வரவேற்பு பதாகைகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது சிலர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாநாட்டுப் பந்தலை பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, சூலூர் எம்எல்ஏ வி.பி.கந்தசாமி உள்ளிட்டோர் அங்கு வந்தனர். கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதிக்குச் சென்ற அவர்கள், “பதாகைகளை வைக்க திமுகவினருக்கு அனுமதி அளிக்கும் போலீஸார், அதிமுகவினரின் பதாகைகளை மட்டும் அகற்றச்சொல்வது ஏன்?” என்று காவல் துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும், எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். கிறிஸ்தவ அமைப்புகளை அவமதிப்பதுபோல காவல் துறையினரின் செயல்பாடு உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார்.
அப்போது, “மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதால், அவை அகற்றப்படுகின்றன” என்று போலீஸார் அவரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சில மணி நேரத்துக்குப் பின்னர், போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றிவிடுமாறும், தனியார் இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைக்கப்பட்ட பதாகைகள் இருக்கலாம் என்றும் அதிமுகவினரிடம் கூறிவிட்டு, போலீஸார் அங்கிருந்து சென்றனர். அதன் பின்னர், அதிமுகவினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
+ There are no comments
Add yours