கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களை, ஊழியர்கள் மாற்றிக்கொடுத்த நிலையில், உறவினர்கள் எடுத்துச் சென்று தகனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி (65) என்பவர் உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவருடைய உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உறவினர்கள் அவரது உடலுடன் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மணியின் உடல் தவறுதலாக மாற்றி கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனிடையே உடலை பெற்றுச் சென்ற திருப்பூரைச் சேர்ந்த உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்து மணியின் உடலை எரியூட்டினர். இந்த சம்பவம் குறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்திய போது, இருவரும் ஒரே உடலமைப்பில் இருந்ததால் உடல்கள் மாற்றி கொடுக்கப்பட்டது தெரியாமல் இறுதிச் சடங்கு நடத்தியதாக திருப்பூரைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினர் இடையே போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதில், மணியின் அஸ்தியை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து திருப்பூரைச் சேர்ந்தவரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மயானத்தில் அவரது உடலை எரியூட்டினர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அரசு மருத்துவமனை இருப்பிட அதிகாரி சரவணப்பிரியா, ”உடல்கள் மாற்றிக்கொடுக்கப்பட்ட சம்பவம் உறுதியாகியுள்ளது. தகவல் அறிந்தவுடன், திருப்பூரைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு உடலை பெற முயற்சித்தோம். ஆனால் அவர்கள் செல்போன்களை எடுக்காததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போதைக்கு இரு தரப்பும் சமாதானமாக சென்றுள்ளனர். இருப்பினும் உடல்களை மாற்றிக்கொடுத்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவு உறுதி செய்யப்பட்டவுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தவறிழைத்த ஊழியர் தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
+ There are no comments
Add yours