கோவை மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளுக்கு இணையாக பூத் கமிட்டிகளை உருவாக்க முடியாமல், பாஜகவினர் திணறி வருகின்றனர்.
கோவை மக்களவைத் தொகுதி களம் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிது அல்ல. ஏற்கெனவே இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற கட்சி தான். பாஜக கடந்த 1998 மற்றும் 1999ம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். குறிப்பாக 1999ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கோவையில் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார். ஆனால் அதன் பிறகு பாஜகவால் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற முடியவில்லை.
2019ம் ஆண்டு அதிமுக கூட்டணியோடு களமிறங்கிய பாஜகவால் அதிகபட்சமாக 3.92 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 2ம் இடம் மட்டுமே பிடிக்க முடிந்தது. ஆனால் இந்த முறை கோவை மக்களவைத் தொகுதியின் களம் மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜகவில் அதன் மாநில தலைவர் அண்ணாமலையும் கோவையில் களம் இறங்கி இருக்கின்றனர்.
அண்ணாமலைக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கோவைக்கு வந்து ரோடு ஷோவில் பங்கேற்றிருந்தார். இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று உரையாற்றி இருக்கிறார்.
தொகுதிக்குட்பட்ட கோவை தெற்கு தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் இருப்பதும் அந்த கட்சிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து கோவை மக்களவைத் தொகுதியில் நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர். இதுவும் பாஜகவிற்கு பெரிய பலமாக கருதப்படுகிறது. மூலை முடுக்கில் எல்லாம் திடீரென கட்சியில் இணைந்திருக்கும் இளைஞர்கள் பாஜக கொடியுடன் அண்ணாமலைக்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சமூக வலைதளங்களும் ஊடகங்களும் அண்ணாமலையே வெற்றி பெறுவார் என கட்டியம் கூறி வருகின்றன.
ஒரு பக்கம் பாஜக தெம்பாக இருந்தாலும் உண்மையை தெரிந்து அவர்கள் பெரிய அளவில் கலங்கி இருக்கிறார்கள் என்பது எதார்த்த கள நிலவரம். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் அடிமட்ட அளவில் பணியாற்ற பூத் கமிட்டி உறுப்பினர்கள் பல ஆண்டுகளாகவே அனுபவம் பெற்றவர்களாக இருந்து வருகின்றனர். ஒரு தெருவில் உள்ள வாக்காளர்கள் எத்தனை பேர் என்பது வரை விரல் நுனியில் வைத்திருக்கக்கூடிய அனுபவம் வாய்ந்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இது அந்த இரு கட்சிகளுக்கும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் இந்த சூழலிலும், பூத்கமிட்டிக்கு வாலண்டியர்கள் தேவை என பாஜக சமூக வலைதளங்களிலும், குறுஞ்செய்திகள் வாயிலாகவும் ஆட்களை திரட்டிக்கொண்டிருக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு கவுன்டர் கொடுக்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.
இதை சுட்டிக்காட்டியே அதிமுக அமைப்புச்செயலாளர் எஸ்.பி.வேலுமணி, கூட்டம் ஒன்றில் கட்சியினரை தெம்பூட்டினார். திமுகவை பொருத்தவரை ஆளும் கட்சியில் சாதனைகளை மட்டுமே முன்னிறுத்தி இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும் என அந்த கட்சியின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உறுதியோடு இருக்கிறார். கூடவே பலம் வாய்ந்த இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அவர் நம்பிக்கையுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
செந்தில் பாலாஜி இல்லாத குறையை தீர்க்க அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கோவையில் முகாமிட்டிருக்கிறார். கட்சி தொண்டர்களுடன் எளிமையாக உரையாடி அவர் இறுக்கங்களை குறைத்து வருகிறார். இதனால் திமுகவில் இணக்கமான சூழல் இருப்பதாக கூட்டணி கட்சிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
அதிமுகவை பொறுத்தவரை தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரின் ஆதரவு சிறப்பாக இருப்பதாக கூறுகின்றனர். முக்கியமாக கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியை நிச்சயம் வெற்றி பெற்று தர வேண்டும் என்கிற வேட்கையோடு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியே நேரடியாக களமிறங்கி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பல மொழிகள் பேசி வாக்காளர்களை கவர்வதில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனும், ஸ்கோர் செய்கிறார். கோவை மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை தொழில்துறை மேலோங்கி இருக்கக்கூடிய நகரம், இங்கு தொழில்துறை கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்கிறார்கள் தொழில்துறையினர்.
கோவையின் பெரு முதலாளிகள் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால், தங்களுக்காக பேச பாஜகவை சேர்ந்த ஒருவர் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதற்காக அண்ணாமலையை ஆதரிப்பதாகவும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். ஆனால் அதேசமயம் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு வேறாக இருக்கிறது. மத்திய அரசு கொண்டுவந்த தொழிலாளர் விரோத சட்டங்கள், பணமதிப்பிழப்பு, அவசர கதியில் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகியவை தங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் தொழிலாளர்களின் வாக்குகளை கவர திமுகவும், அதிமுகவும் முட்டி மோதுகின்றன.
கோவை மக்களவைத் தொகுதியை பொருத்தவரை ’சாதி’க்கும் மிக பெரிய பங்கு உண்டு. அந்த வகையில் கவனிக்கத்தக்க வாக்குறுதிகளை அளிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய கோவை மக்களவைத் தொகுதி வாக்காளர்கள் தயாராகி வருகின்றனர். தாமரை மலருமா? இரட்டை இலை துளிர் விடுமா? அல்லது இந்த இரண்டையும் உதயசூரியன் சுட்டெரிக்குமா? என்பதை அறிய காத்திருக்க வேண்டும் ஜூன் 4 வரை.
+ There are no comments
Add yours