‘மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த, பிரசவ மருத்துவமனையை இடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை காக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்’ என, தருமபுர ஆதீனம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மயூரநாதர் வடக்கு வீதியில், நகராட்சி பராமரித்து வந்த இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது.
இது, பிரசவத்தின் போது இறந்த தன் தாய் நினைவாக, 1943ல் தருமபுர ஆதீனத்தின், 24வது மடாதிபதியாக இருந்த, ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சாரிய சுவாமிகளால், ஆதீனத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது.
அப்போதைய ஆங்கிலேய கவர்னர் சர் ஆதர் ஜேம்ஸ் ஹோப், மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். கட்டுமானப்பணி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நிறைவடைந்தது. 1951ல், அப்போதைய தமிழக முதல்வர் குமாரசாமி ராஜா, மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இந்த மருத்துவமனை, சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இம்மருத்துவமனை, தருமபுரம் ஆதீனம் மடத்தின் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, மருத்துவமனை நல்ல நிலையில் இயங்கி வந்தது.
அதன்பின், நகராட்சி நிர்வாகம் சரியாக கண்டு கொள்ளாததால், மருத்துவமனை கட்டடம் பழுதடைந்தது. தற்போது, மருத்துவமனை கட்டடத்தை இடித்து விட்டு, அங்கு குப்பை கிடங்கு அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதற்கு, தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அவர், ‘மருத்துவமனை இடத்தின் பராமரிப்பை ஆதீனத்திடம் கொடுங்கள். மீண்டும் இலவச மருத்துவமனை நடத்துகிறோம்’ என, நகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதற்கு பதில் அளிக்காமல், இலவச மருத்துவமனையை இடிக்கப் போவதாக செய்தி வெளியாகி இருப்பது, அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்’ என, ஆதீனம் அறிவித்துள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: தருமபுரம் ஆதீனம் சார்பாக, தாங்கள் உருவாக்கிய மருத்துவமனையை மீண்டும் நடத்த, நகராட்சிக்கு கடிதம் எழுதியும், எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது நகராட்சி கட்டடத்தை இடிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிக்கும் அரஜாகத்தை நிறுத்தி, உடனே ஆதீனத்திற்கு சொந்தமான மருத்துவமனையை புனரமைத்து வழங்க வேண்டும். மருத்துவமனை கட்டடத்தை இடிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours